11 - மீட்டாத வீணை
"நிலவுப் பெண்"
தப்பு....தப்பு.....
தரையில், அவளது உடல் படுக்க வைக்கப் பட்டிருந்த்து.. தலைக்கு மேல் ஒரு சிறு விளக்கு எரிந்து கொண்டிருந்தது
ஆமாம்...ஒருவருடைய பெயர் அவரது உடலுக்கா..உயிருக்கா...
உயிருக்குத்தான் இருக்க வேண்டும்....ஏனெனில்...உயிர் பிரிந்ததும் அது பாடி என்று சொல்லப்பட்டுவிடுகிறதே!
பக்கத்து அறையில் அமர்ந்திருந்தபடியே ஜன்னல் வழியே சாந்தியின் உடலைப் பார்த்துக் கொண்டிருந்தார் சிவராமன்.
"அப்பா! எல்லாருக்கும் சொல்லியாச்சு.ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சுட்டாங்க.நாளைக்குக் கார்த்தாலே எடுத்துடலாம்னு வாத்தியார் சொல்லிட்டுப் போயிட்டார்.பெசன்ட்நகர்ல, அப்போதான் டயம் அலாட் பண்ணியிருக்காங்க" என்றான் அறையினுள் நுழைந்த சிவராமனின் மகன் ராமநாதன்.
இப்ப எல்லாம் செத்தவங்களை அனுப்பி வைக்கக்கூட சுடுகாட்டில முன்னமே அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டியிருக்கு.பெரிய மனுஷங்க போயிட்டங்கன்னா ..உடனே நேரம் அலாட் ஆயிடுது.ஆனா அன்னிக்குன்னு சாதாரணமானவங்கப் போயிட்டா...அவங்களை அடுத்த நாள்தான் அனுப்பி வைக்க முடியுது.செத்தப்பிறகுக் கூட ஏழை, பணக்காரன் பாகுபாடு இருக்கத்தான் செய்கிறது.
சிவராமன் இதழ்களில் விரக்தி சிரிப்பு.
"அப்பா! இது வரைக்கும் யாரெல்லாம் வந்திருக்கா தெரியுமா?"
தெரியும்"
:வெளியே வாங்க! வந்து அவங்களை எல்லாம் பாருங்க"
"நோ..நான் யாரையும் பார்க்க வேண்டாம்,நீயே அவங்கக் கிட்ட எல்லாம் பேசி அனுப்பிடு"
"அப்பா! இந்த சமயத்திலே உங்களைப் பார்க்காம எப்படிப் போவாங்க!..அவங்க அப்பா எங்கேன்னு கேட்டா என்ன சொல்றது?"
"உடம்பு சரியில்லை..உள்ள படுத்திருக்கார்னு சொல்லு. இல்லேன்னா, டாக்டர் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு சொல்லியிருக்கார்னு சொல்லு"
"நம்ப மாட்டாங்கப்பா"
"நம்பினா நம்பட்டும்...இல்லேன்னா போகட்டும். வேணும்ணா, உங்களையெல்லாம் பார்க்க அப்பாவுக்கு இஷ்டமில்லைன்னு சொல்லிடு.இப்ப..தயவு செய்து என்னை நிம்மதியா இருக்க விடு"
ராமநாதன், திரும்பி ஹாலுக்கு வந்தான்.
அவன் அம்மாவின் உடலைச் சுற்றி...மனைவி வனஜாவும், அவளது தாயும், தந்தையும் அமர்ந்திருந்தனர்.
"பாவம்! வயசான காலத்திலே..உங்கப்பாவுக்கு இப்படி ஒரு கஷ்டம் வர வேண்டாம்.வயசான காலத்திலே புருஷனை இழந்து பொண்டாட்டி இருந்துடலாம்.ஆனா...பொண்டாட்டியை இழந்து புருஷாளாலே இருக்கமுடியாது' என்றார் அப்பாவுடன் வேலைப் பார்த்து அப்பாவுடனேயே ஓய்வு பெற்ற அப்பாவின் நண்பர் செல்வம்.
அர்த்தமில்லாமல் எழவு வீட்டில் இன்று நீ...நாளை நான் என்பதை மறந்து எப்படி இப்படி பேசுகிறார்கள் சிலர்.
"ம் ஹூம்" அப்பா உள்ளே கனைக்கும் சப்தம் கேட்ட ராமநாதன்..உள்ளே சென்றான்..
"இன்னும் வேற யாராவது வந்திருக்காங்களா?"
"அப்பா! ஏம்ப்பா இப்படியிருக்கீங்க! உங்களோட நாப்பது வருஷம் ஒன்னா இருந்த அம்மா...நாப்பது வருஷத்து தாம்பத்தியம்.உங்களைப் போல ஒருத்தரை கணவனாய் அடைய நான் ரொம்ப பாக்கியம் செஞ்சிருக்கணும்னு அம்மா அடிக்கடி சொல்லுவா..ஆனா...இன்னிக்கு அம்மாவோட இழப்பு உங்களை ஏம்ப்பா அசைக்கலை?. மனசுல துக்கம் இருக்கும் போது..அழுதுடுங்கப்பா..அழுதுடுங்க!"
"இப்படி நீட்டி முழக்கி என் கிட்ட இப்படி பேச வேண்டாம்...எனக்கு அழுகை வரல்ல.அழலை.அவ்வளவுதான்."
திடீரென ஹாலில் பெருங்குரலில் அழுகை சப்தம்..
சிவராமனின் மகள் அனிதா, தன் கணவன், இரு குழந்தைகளுடன் அழுதபடியே உள்ளே வந்தாள். அம்மாவின் உடலைக் கட்டிப் பிடித்து அழுதவள், "அப்பா எங்கே? அப்பா எங்கே?" என்றாள் அண்ணன் ராமநாதனிடம்
:உள்ளே உட்கார்ந்து இருக்கார்.அழலை ,கார்த்தால இருந்து பச்சைத் தண்ணீ குடிக்கலை.
நான் போய் பார்க்கிறேன் என்றவள்..அப்பா இருந்த அறையினுள் நுழைந்தாள்
"அப்பா! காலைல இருந்து ஒன்னுமே சாப்பிடலையாமே! வெளியே வாங்க ப்பா. ஒருவாய் காஃபியாவது குடியுங்க"
"பொறந்ததுலே இருந்து போடறதும், இறக்கறதுமாத்தானே இருக்கோம்.ஒருநாள் சாப்பிடலைன்னா என்ன" என்றவர், பின் ,"வர்றேன்...முதல்லே நீ போய் ஏதாவது சாப்பிடு" என்றாரே தவிர வெளியே வரவில்லை.
உள்ளே...வனஜா ,தன் அப்பா, அம்மாவிற்கு , ஒரு கேனிலிருந்து, டிஸ்போசபிள் கப்ல காஃபியைப் பிடித்து கொண்டிருந்தாள்.
அனிதாவை பார்த்ததும் "அனிதா...நீயும் ஒரு வாய் குடியேன்" என்றாள்.
"அப்பா....பாவம் மன்னி, வாயைவிட்டு அழுதுட்டா எல்லாம் சரியாயிடும்.இப்படி துக்கத்தை மனசுல வைச்சு அமுக்கிக் கிட்டு இருக்கக்கூடாது"
என்றாள் அனிதா
"நானுன் அதைத்தாம்மா சொல்றேன்.ஆனா...உள்ளப்போய் அவர் கிட்ட பேசவே பயமாய் இருக்கு" என்கிறார் வனஜாவின் தந்தை.
"என்னமோ போங்க! கட்டின பொண்டாட்டி செத்து கிடக்கிறா! இப்பக் கூடவா ஒரு மனுஷனுக்குக் கண்ணில தண்ணீ வராது" என்கிறாள் வனஜாவின் தாய்.
அப்போதுதான் அப்பா வெளியே வந்தார்.குற்ற உணர்ச்சியுடன் வனஜாவின் தாய்,"எனக்கு உங்க துக்கம் புரியறது.ஆனாலும் போனவா திரும்பி வரப் போறதில்லை.இனிமே உங்க உடம்பை நீங்கதான் பார்த்துக்கணும்" என்றாள்
"தாத்தா...பாட்டிக்கும் உனக்கும் கல்யாணம் ஆகும் போது பாட்டிக்கு என்ன வயசு?" என் கிறாள் பேத்தி.
"அது இப்ப ரொம்ப அவசியமா?" என அனிதா, பெண்ணைக் கண்டிக்க தாத்தா பேத்தியை அணைத்துக் கொள்கீறார்.
"நாப்பது வருஷங்களுக்கு முன்னால கல்யாணம் பண்ணிக்கிட்டேண்டா பாட்டியை" என்றபடியே, பேத்தியை லேசாக முத்தமிட்டார் சிவராமன்.
"பொண்டாட்டி செத்து கிடக்கறா...இப்படி ஒரு உணர்ச்சியே இல்லாமா மனுஷா யாராவது இருப்பாங்களோ?" வனஜாவின் காதில் தாய் முணுமுணுக்கிறாள்
மெதுவாக இருட்ட ஆரம்பிக்கிறது.நிலவுப் பெண் தன் சூரியக் கணவனை அனுப்பிவிட்டு தன் ஒளியைப் பரப்பத் தொடங்குகிறாள்.
வனஜாவின் தந்தை, பக்கத்து ஓட்டலிலிருந்து வாங்கி வந்த இட்டிலியை அனைவரும் சாப்பிட ஆரம்பிக்கின்றனர்.
சிவராமன் தள்ளாடியபடியே மொட்டை மாடி ஏற ஆரம்பிக்கிறார்.
பால் நிலவு...
அதைப் பார்க்கிறார்....நிலவில் சாந்தியின் முகம் தெரிகிறது.சிவராமனின் கண்கள் கலங்குகிறது...
நாற்பது வருடங்கள் பின்னோக்கிச் செல்கிறது நினைவுகள்..
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்றும் அப்படித்தான்..பௌர்ணமி நிலவு ஒளி...
முப்பது வயது கடந்தும் திருமணமாகாத இளைஞன் சிவராமன்...
இரவுக் காட்சி சினிமா பார்த்துவிட்டு தனது ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தான்.அவனுக்கு இருநூறு அடிகள் முன்னால் ஒரு இளம் கணவன்,மனைவி, தங்கள் இரு குழ்ந்தைகளுடன், ஒரு குழ்ந்தைக்கு ஐந்து வயதிருக்கும்.. ஆண் குழந்தை...மற்றது மூன்று வயதிருக்கும்,..பெண் குழந்தை... கைனடிக் ஹோன்டாவில் சென்று கொண்டிருந்தனர்.அவர்களும் இவன் பார்த்த படத்திற்கே வந்திருக்க வேண்டும்
ஆள் நடமாட்டமே இல்லா சாலை.....
திடீரென நால்வர் எங்கிருந்தோ வந்து கைனடிக் ஹோண்டாவை தடுத்து நிறுத்தினர்.நிலைதடுமாறி வண்டி கவிழ்கிறது.தெருவில் விழுந்த குழ்ந்தைகள் அழ ஆரம்பிக்கின்றனர்.
தூரத்திலிருந்து இதைப்பார்த்து விட்ட சிவராமன், சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்தினான்.
அந்தப் பெண்ணை நால்வரும், அவள் திமிரத் திமிர, அருகில் இருந்த புதருக்குள் இழுத்துச் செல்கின்றனர்."அவளை விட்டு விடுங்க..அவளை விட்டு விடுங்க.." எனக் கத்தியவாறே வண்டியிலிருந்து வீழ்ந்ததால் வண்டி மேலே கவிழ...காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில்..குழந்தைகளையும் பாராது...தவழ்ந்து...தவழ்ந்து புதரினை நோக்கிச் செல்கிறான் கணவன்
செய்வதறியாது...தவித்த சிவராமன்...
கீழே விழுந்த குழந்தைகளிடம் வந்து அவர்களை அரவணைத்துக் கொண்டான்.
திடீரென அப்பெண்ணின் பெரிய அலறல் சப்தம்...தொடர்ந்து "ஐய்யய்யயோ...அவரை ஒன்னும் செஞ்சுடாதீங்க"ன் னு கதறல்
எல்லாமே...சில மணித்துளிகளுக்குள்..
அப்பெண் பலவந்தப்படுத்தப் பட்டாள்.தடுக்க முயன்ற கணவனுக்குக் கத்திக் குத்து.
குழ்ந்தைகளையும் தூக்கிக் கொண்டு சிவராமன் அங்கு வந்தான்.மரணவாயிலில் இருந்த கணவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.
சிவராமனை அருகில் வரச்சொல்லி கைகளால் சைகை செய்கிறான்.....
"தம்பி நீ யாருன்னு எனக்குத் தெரியாது.முன்ன பின்ன தெரியாதவன் கிட்ட இப்படிக் கேட்கறது தப்புதான்.ஆனா...என் நிலமைல வேற வழி தெரியல...உன்னை என் கூடப்பிறந்த தம்பியா நினைச்சுக் கேட்கறேன்...எங்களுக்கு வேற எந்த உறவும் இல்ல..தயவு செய்து சாந்தியையும், குழ்ந்தைகளையும் வாழவைப்பா" என் கிறான் பரிதாபமாகப் பார்த்தபடியே!..இரு கைகளையும் கூப்பியபடியே...
அந்தச் சூழல்...
அந்தக் குழந்தைகளின் பால்மாறா முகங்கள்...
அந்தப் பெண் கிடந்த அபல நிலை
மரணிக்கும் தறுவாயில் கணவனது வேண்டுகோள்..
தன் கண்ணெதிரே ஒரு அநீதி நடந்தும் அதைத் தடுக்க இயலா த்னது கையாலாகாத்தனம்...
எல்லாவற்றுக்கும் மேலாக...சிவராமனின் இளமை..
எதையும் யோசிக்கத் தோன்றவில்லை அவனுக்கு.
கணவனின் வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பதாக உறுதிமொழியளித்தான்.அதற்காகவே உயிருடன் இருந்த்து போல கணவன் நிம்மதியாய் கண் மூடினான்.
அத்தனை நிகழ்வுகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த்து நிலவு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எல்லாமே நேற்று நடந்தது போல இருக்கிறது சிவராமனுக்கு,
அன்று யாரென்றே தெரியாத அண்ணனுக்கு வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்றி விட்டார்.
இரு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கிவிட்டார்.
ராமநாதன், இன்று, ஒரு தனியார் நிறுவன அதிகாரி...
வனஜாவும் படிப்பை முடித்துத் திருமணமாகி இன்று இரு குழ்ந்தைகளுடன்..
"தம்பி நான் உன் அண்ணன் போல.." இறக்கும் தறுவாயில்...முகம் தெரியாத அண்ணன் கூறியதற்காக...அந்தப் பெண் சாந்தியை தன் மனைவியாக ஊர் உலகிற்காக சிவராமன் ஏற்றாலும்...அவளை தன் அண்ணனின் மனைவியாகவே நினைத்தார்.
ஆம்...அவரைப் பொறுத்தவரை அவள்...அவனுக்கு தாய்...
அண்ணனின் மனைவிக்கும் தாய் ஸ்தானம் தானே
இறைவன் இந்தப் பிறவியில் அவனுக்கு அளித்த இரண்டாம் தாய்
நிலவைப் பார்க்கிறார் சிவராமன்
நிலவே அன்றும் நீதான் நான் கொடுத்த உறுதி மொழிக்கு சாட்சி...அந்த உறுதிமொழியை முழுமையாக இன்று நிறைவேற்றிவிட்டேன்.அதற்கும் நீதான் சாட்சி"மனதிற்குள் சொல்லிக் கொண்டார்.
மெல்ல மாடியிலிருந்து தள்ளாடியபடியே கீழே இறங்கினார்.
சமையலறைக்குச் சென்றார்....சாந்தி சமைத்துக் கொண்டிருந்தாள்..
பூஜையறைக்குச் சென்றார்...சாந்தி பூஜை செய்து கொண்டிருந்தாள்
வீடு முழுதும் எங்கும் சாந்தி தெரிந்தாள்.
அவளது அறைக்குச் சென்றார்.மடித்து வைக்கப்படிருந்த அவளது புடவைகளில் ஒன்றை எடுத்தார்..
முகர்ந்தார்...தன் தாயின் வாசம்..
அதை எடுத்துக் கொண்டார்.கடைசிவரை தவ வாழ்க்கை வாழ்ந்த சாந்தியின் உடல் இருந்த இடத்திற்கு வந்தார்
அவளது உடலருகே அமர்ந்தார்.அவரை அறியாது குலுங்கி...குலுங்கி அழுதார்.
அந்தப் புடவையை தலைக்கு வைத்துக் கொண்டு படுத்தார்.
காலையில் அனைவரும் எழுந்துவிட்டனர்..
ஆனால்...சிவராமன் எழுந்திருக்கவில்லை.
(குங்குமம் இதழில் வந்த கதை)
(குங்குமம் இதழில் வந்த கதை)
Comments
Post a Comment