18 -அழகான பிசாசு

மாலை ஐந்து மணியளவில், வாஷிங்டன் டல்லஸ்.விமான நிலையத்தில், கடார் ஏர்லைன்ஸ் கவுண்டரில் தன் பெற்றோருடன் நின்று, அவர்களுக்கான போர்டிங் டிக்கெட்டை  வாங்கிக் கொடுத்து.அனுப்பிவிட்டு வெளியே வந்தான் ரமேஷ்.

பார்க்கிங் பகுதிக்கு வந்தவன், தன் காரில் அமர்ந்தபடியே..அலைபேசிக்கு உயிரூட்டினான்.

எதிர்முனையில் தன் அலைபேசி அலற எடுத்த கீர்த்தனா, "ம்..சொல்லுடா.." என்றாள்.

"ஏர்போட்டிலிருந்து பேசறேன்.அப்பா, அம்மாவை பேக் பண்ணியாச்சு.நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வந்துடு.நாம ஒண்ணா இருந்து நாலு மாசம் ஓடிப்போச்சு.'

"ஐயாவுக்கு இப்பதான் என்னோட இருக்கணும்னு நெனப்பு வந்துதாக்கும்..உங்கப்பா, அம்மா வந்ததுல இருந்து நாம் ஒண்ணா வாழறது தெரியக்கூடாதுன்னுட்டு..என் ஃபிரண்ட் வீட்டுக்கு துரத்திட்டு..இப்ப பேச்சைப் பாரு"

"சாரி..கீர்த்தனா. ஐ ஆம் ஹெல்ப்லெஸ் ..என்ன செய்யறது சொல்லு" என்றவன், "எப்ப வர?" என்றான்.

"டேய் முட்டாள் ..லிவிங் டு கெதர் கணவா..நான் ஏற்கனவே வந்துட்டேன்.வழிமேல் விழி வைத்து காத்துக்கிட்டு இருக்கேன்"

ரமேஷ்..இளையராஜாவின் பாடல் ஒன்றை விசிலடித்தபடியே..காரை இயக்க ஆரம்பித்தான்.

அவன் வீடு போய் சேருவதற்கு முன் அவனைப் பற்றியும், கீர்த்தனா பற்றியும் உங்களுக்கு சொல்லி விடுகிறேன்.


ரமேஷ்..

சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரியொன்றில் தகவல் தொழில் நுட்பம் படிப்பை  முடிக்கும் முன் கேம்பஸ் தேர்வில் பிரபல மென்பொருள் நிறுவத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்சமயம் ஆன் சைட்டில் அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வந்துள்ளான்.அதே போன்று, வேறு ஒரு நிறுவனம் சார்பில் கீர்த்தனாவும் தன் படிப்பை முடித்து விட்டு அமெரிக்கா வந்துள்ளாள்.

இருவருக்கும் பொதுவான ஒரு நண்பர் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆக..உடனே..இருவருக்குள்ளும்  காதல் பல்ப் எரிய.,.தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் சந்திப்பை ஏற்படுத்தி இயற்கையும் அதை உறுதி செய்வதாக எண்ணினர்.

ஒருநாள், ஒரு பூங்காவில் செயற்கை நீரூற்றின் அருகில் அமர்ந்தபடியே தன் காதலை அவளிடம் சொன்னவன், அத்துடன் நிற்காது..”கீர்த்தனா..நாம ஏன்..ஒன்றாக ஒரே வீட்டில் இங்கு வசிக்கக் கூடாது?இந்தியா திரும்பியதும்..நம் பெற்றோரிடம் சொல்லி திருமணம் செய்து கொள்ளலாம்” என்றான்..

அப்போது சுற்றிலும் யாருமில்லை.நீரூற்றின் அருகில் ஒரு நாரை மட்டுமே நின்று கொண்டிருந்தது. .

அவன் சொல்வதைக் கேட்ட கீர்த்தனா..இன்று பலரிடம் லிவிங் டு கெதர் கல்சர் பரவி வருவதை அறிந்தவளாய் இருந்ததாலும், அவளின் சில நண்பிகள் அப்படி இருந்ததாலும், சிறிது நாட்கள் யோசனைக்குப் பின் ஒப்புக் கொண்டாள்.

நாட்கள் சென்றன.

நான்கு மாதங்கள் முன்னர் ரமேஷின் பெற்றோர், அவனுடன் நான்கு மாதம் அங்கு தங்க வர, கீர்த்தனா தற்காலிகமாக தன் ஃபிரண்ட் ஒருத்தியுடன் தங்கி இருந்தாள்.

ரமேஷ்..தன் வாகனத்தை நிறுத்தி விட்டு..வீட்டினுள் நுழைந்தான்.

நுழைந்தவன்..கீர்த்தனாவைக் கண்டதும்..அன்புடன் அணைத்துக் கொண்டான்.பின், "கீர்..ரொம்ப பசிக்குது.." என்றபடியே அவளை அணைத்தான்."டேய்..டேய்..என்னை சாப்பிடமுடியாது" என அலறினாள் அவள்.

இரவு இனிமையாய் கழிந்தது.

அடுத்தநாள் ..சனிக்கிழமை என்பதால்..அன்று..முந்தைய நாள் கிளம்புமுன் அவன் தாய் சமைத்து ஃபிரிட்ஜில் வைத்திருந்த உணவை உண்டு..நாள் கழிந்தது.

ஞாயிறு காலை  ஒன்பது மணிக்கு எழுந்த ரமேஷ், தனக்கு அருகில்..குளிரினால்..கைகால்களை மடக்கிக் குருவி போலத் தூங்கிக் கொண்டிருந்தவளை ஒரு கணம் ரசித்தான்.

பசி வயிற்றைக் கிள்ள, "கீர்த்தனா..கீர்த்த்னா" என அவளை எழுப்பினான்.

"என்னடா?" என்றபடியே எழுந்தவள், கைகள் இரண்டையும் தூக்கி முதுகுப்பக்கம் எடுத்துச் சென்று சோம்பல் முறித்தாள். விம்மும் இளைமையை ரசித்தபடியே, "எங்கப்பா..அம்மா வந்து என்னோட இருந்தாங்க..நீ தனியா இருந்த ஓக்கே! ஆனா, அவங்கப் போனதும் வந்தவ நம்ம கண்டிஷனை மறந்துட்டியா?" என்றான்.

"என்ன சொல்ற..நீ..?"

"ஒருநாள் சமையல் நீ..ஒருநாள் நான்..அதுதானே நமக்குள்ள கண்டிஷன்.இன்னிக்கு உன் டர்ன்..இப்படி தூங்கிக் கொண்டிருந்தா எப்படி..காலைல பிரேக் ஃபாஸ்ட் என்ன..லஞ்ச் என்ன.பண்ணப்போற?."

'இன்னிக்கு டயர்டா இருக்கு..இன்னிக்கு வேணும்னா..வெளியே போய் சாப்பிடலாமே! செலவு பத்தி யோசிக்காதே என் செலவு"

"ஓஹோ..செலவை நெனச்சுதான் நான் இப்படி சொல்றேன்னு நினைக்கிறியா?"

"ஐயோ! அப்படி நினைச்சு நான் எதுவும் சொல்லலை.அப்படியே நினைச்சு சொன்னாலும் தப்பில்லை.இப்ப..நமக்குள்ள என்ன உறவு.நான் யாரோ! நீ யாரோ!  நாம இரண்டு பேரும் லிவிங் டுகெதர் அவ்வளவுதான்.நாம இப்படியே இருந்திட்டு..அப்புறம் நமக்குப் பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கலாம்கிறதுதானே நம்ம கண்டிஷன்.அதனால என் பணத்தை செலவு பண்ண நான் யோசிக்கணும்.உன் பணத்தை செலவழிக்க நீ யோசிக்கணும்.." என்றவள்...அவன் தன்னையேப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து"என்ன யோசிக்கற?" என்றாள்.

"குடும்ப வாழ்க்கைக்கு அழகு வேண்டாம்..சுமாரான பொண்ணு போதும்னு சொல்லிட்டுப் போன புண்ணியவானை நினைச்சுக் கிட்டு இருந்தேன்" என்றான்..

"டேய்..இது காம்ப்ளிமென்டா..இல்ல கிண்டலா"

"அம்மா..தாயே..கோபிச்சுக்காதே..நீ ஒரு அழகான பிசாசுதான்" .."என்றவன் மீது, போலிக் கோபத்தில் தலையணையைத் தூக்கி எறிந்தாள்.

"தலையணை வேண்டாம் நெஞ்சணைப் போதுமே" என்றவன்..அவளிடமிருந்து அடுத்தத் தாக்குதல் வரும் முன்"இன்னிக்கு பிரேக் ஃபாஸ்ட்..ஃபிரிட்ஜ்ல இருந்து பிரட் அண்ட் பட்டர்.ஒருமணிக்கு மேல எதாவது இந்தியன் ரெஸ்டாரண்ட் போவோம்" என்றான்.

"என்னோட லிவிங் டுகெதர் நண்பா..வருங்காலக் கணவா, உனக்கு சாப்பாடு போடாம பட்டினிப் போட்ட பாவம் எனக்கு வேண்டாம்.கொஞ்சம் இரு ஆம்லெட் போட்டுத் தரேன்"

"ஆம்லெட்டா..ச்சீச்சீ..ஐயா பியூர் விஜிடேரியனாக்கும்"

"டேய்..டேய்..வேண்டாம்டா.உங்கப்பாதான் போயாச்சே! ஏன் இன்னமும் நடிக்கற.நீ அமெரிக்கால காலடி வைச்சப் பிறகு, மனுஷனைத் தவிர...ஊர்வன,நடப்பன,பறப்பன என எல்லாத்தையும் சாப்பிட ஆரம்பிச்சுட்டியே" என்ற கீர்த்தனாவை, ரமேஷ் சிரித்தபடியே..தன் இதழ்களால் அவள் இதழை மூடினான்.

வாழ்க்கை முழுதும் அனுபவிக்க வேண்டிய சுகங்களை, மிகவும் ஜாக்கிரதையுடன் அவர்கள் திகட்ட..திகட்ட..அனுபவித்தனர்.

இந்நிலையில், ஒருநாள் ரமேஷ்..இந்தியாவிலிருந்து வந்திருந்த ஒரு கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தான்.அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வந்த கீர்த்தனாவை அவன் பார்க்கவில்லை..

உள்ளே நுழைந்தவள், "என்ன அப்பாகிட்ட இருந்து லெட்டரா? என்னதான் லேப்டாப், ஐபேட்னு வாங்கிக் கொடுத்தாலும், உங்க அப்பாவுக்கு கடிதம் எழுதினாத்தான் ஒரு திருப்தி" என்றாள்.

"ஆமாமாம்..உங்கப்பாவுக்கும் அப்படித்தான்..இந்த் லெட்டர் உங்கப்பா எழுதியதுதான்" என்றான் ரமேஷ்.

உடன் சற்று கோபமாக கீர்த்தனா, "எனக்கு வந்த லெட்டரை மேனர்ஸ் இல்லாம நீ எப்படி படிக்கலாம்?' என்றாள்.பின், "இதோ பாரு ரமேஷ்..நாம இரண்டு பேரும் இன்னிக்கு ஒண்ணா வாழலாம்..நாளைக்கே கணவன், மனைவின்னு ஆனாலும்..அவங்க அவங்களுக்குன்னு பெர்சனல் விஷயங்கள் இருக்கும்,அதையெல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படக்கூடாது"

"இப்ப நீ என்ன சொல்ல வர்ற?"

"ஒருத்தருக்கு வந்த லெட்டரை இன்னொருத்தர் படிக்கறது தப்பு.நாளைக்கே உனக்கு ஒரு லெட்டெர் வ்ந்து..அதை நான் பிரிச்சுப் படிச்சா..உனக்குக் கோபம் வராதா?"

"கண்டிப்பா வராது"

"அப்படின்னா..ஓகே..இந்தா உனக்கு உங்கப்பா எழுதின கடிதம்.நான் படிச்சுட்டேன்" என்றபடியே தன் கைப்பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து அவன் முன் நீட்டினாள்.

"கீர்த்தனா..எனக்கு வந்த லெட்டரை நீ எப்படி..." எனக் கோபமாகப் பேச ஆரம்பித்தவனை, "இதைத்தான்..முதல்லேயே நான் சொன்னேன்"என்றவள், "சரி சரி..என் அப்பா என்ன எழுதியிருக்கார்?"

"ம்..உனக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்காம்.பையனும் யூஎஸ்லதான் இருக்கானாம்.முடிச்சுடலாமான்னு கேட்டு இருக்கார்"

"அப்படியா..நீ என்ன சொல்ற..?"

"நல்ல இடமா இருந்தா முடிச்சுடச் சொல்லு"

"அப்படியா? அப்படின்னா..உங்கப்பாவுக்கும் அப்படியே சொல்லிடலாமா?உங்கப்பாவும் உனக்கு ஒரு பொண்ணோட ஜாதகம் வந்திருக்கறதா..எழுதியிருக்கார்"

சற்று நேரம் யோசித்தவன், 'பார்த்தியா கீர்த்தனா..நம்ம நெலமையை.நாம இப்ப ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நெலமையில இருக்கோம்" என்றான்.

அவளை ஏறிட்டு நோக்கியவள்"வாட் டூ யூ மீன்?" என்றாள்.

"சாரி..கீர்..நம்மால கணவன், மனைவியா வாழ முடியுமா?..இல்ல நாம் அவரவர் வாழ்வைத் தேடி பிரியணுமா?..கொஞ்சம் யோசனைப் பண்ணிப் பார்த்தா..வாழ்க்கையில பல சந்தர்ப்பத்துல நம்மால ஒத்துப் போக முடியாதுன்னு தோணுது.நீ பண்ற செலவுக்கு, நாளைக்கே நமக்குக் குழந்தைகள் பொறந்தா..சமாளிக்க முடியுமான்னு தெரியல"

"ஓகோ நான் செலவு செய்யறதைப் பத்தி நீ பேசறியா?..நீ மட்டும் என்ன..ஹோட்டல்ல நான் விஜ், பீர், ஒயின்னு சாப்பிட்டுக் கிட்டு இருக்கியே தினமும்..அதுக்கு எந்தப் பொண்ணு சரிப்படுவான்னு பாத்துடறேன்"

"எனக்கு எவ்வளவோ கனவுகள் இருக்கு..அதெல்லாம் நிறைவேறணும்னா...அதுக்கு ஏத்தாப் போல பொண்ணு வரணும்.ஐ ஆம் சாரி டூ  சே...யூ ஆர் நாட் தட் கேர்ல்"

"சோ..என்னை விட்டுட்டுப் போக நீ தயார்..இல்லையா?"

"நம்ம உறவுக்கு குட் பை சொல்றதைத் தவிர வேற வழியில்லை"

=======

சென்னை அண்ணாநகரில் ஒரு அடுக்ககம்.ஜி 6 .அதன்  முன் நின்று அழைப்பு மணியை அழுத்தினார் அவர்.

கதவைத் திறந்தவர்.."வாங்க..வாங்க.." என வரவேற்றார்.பின், "உங்க பொண்ணு கற்பகத்தோட ஜாத்கம் என் பையன் வெங்கட்டோட ஜாதகத்தோட நல்லா பொருந்தி இருக்கு" என்றார்.

"உங்கப் பையன் பேரு ரமேஷ்னு சொன்னீங்க."

"ஆமாம்..ஜாதகப் பெயர் வெங்கட்..ஆனால் ஆஃபிஸ்ல ரமேஷ்.உங்கப் பொண்ணுப் பேரு கூட கீர்த்தனான்னு சொன்னீங்க"

"ஆமாம்..அவ ஜாதகப் பேரு கற்பகம்.ஆஃபிஸ்ல கீர்த்தனா"

'அப்போ..இந்தத் தையிலேயே கல்யாணம் வைச்சுக்கலாம்.இரண்டு பேரும் யூ எஸ். மூணு வாரம்தான் லீவு கிடைக்கும்'.

இன்னார்க்கு இன்னார் என முடிவு செய்யும் இயற்கையின் முடிவை நாம் மாற்றமுடியாது

(குங்குமம் - 29-7-22)

Comments

Popular posts from this blog

21 -முறிந்த உறவு

5 - அப்பா

14 -நில அபகரிப்பு