20 - அக்கினிக்குஞ்சு

அக்கினிக்குஞ்சு
-------------------------

ஒரு நாள் இராமசாமி..அலுவலகம் செல்கையில் நண்பன் கதிரேசனை பேருந்தில் சந்தித்தான்..அவன் தலைமைச் செயலகத்தில் வேலை செய்வதாகக் கூறினான்..

இராமசாமியை பார்க்க பரிதாபமாக இருந்தாலும்..அவன் மனதில் ஏதோ பாரம் இருப்பதைப் போல இருந்ததாலும்..'ஏன் இராமசாமி..என்னவாயிற்று உனக்கு?' என்றான் கதிரேசன்.

இராமசாமி தான் எழுத்தாளர் ஆன கதையையும்..புத்தகம் வெளிவந்ததையும்..பின் நடந்த விஷயங்கள் அனைத்தையும் அவனிடம் பகிர்ந்துக் கொண்டான்.

கதிரேசனும்..'அடடா..ஆமாம்..துரை கூட என்கிட்ட சொன்னான்..உன் புனை பெயர் கூட ஏதோ அரிசிப்பொரி...' என இழுத்தான்.

இராமசாமிக்கு..கோபம் 'சுர்" ரென தலைக்கு ஏறியது.எழுத்தாளனுக்கான கர்வம் தலைதூக்கியது..'யாரைப் பார்த்து..அரிசிப்பொரி..என்கிறாய்..தீப்பொறி..' என்றான் ..

பின்,முண்டாசுக் கவியின் கோபப் பார்வைகளை படங்களில் பார்த்திருக்கிறானே..அதே போன்று கண்களை உருட்டி ..மிரட்டி..'என் புத்தகத்தின் பெயர் ..அக்கினிக் குஞ்சும் ஆங்கோர் பொந்தும்..'

ஆடிப்போன கதிரேசன்..'அப்படியா..கொஞ்சம் முயன்றால்..உன் புத்தகத்தை நூலகங்களுக்கு அனுப்பலாமே..தமிழக அரசு..இப்போவெல்லாம் ஆயிரம் பிரதிகள் நூலகங்களுக்கு வாங்குகிறதே' என்றதுடன் நில்லாது..'இன்னொரு புத்தகமும் தயாரித்துக் கொள்..இரண்டையும் சேர்த்து நூலக ஆர்டருக்கு முயற்சிப்போம் ஆனால்..என்ன..நாற்பது ரூபாய் புத்தகத்திற்கு..இருபது ரூபாய் போல்தான் விலை நிர்ணயிப்பார்கள்' என்றான்.

பரணில் தூங்கிக்கொண்டிருக்கும் புத்தகங்களுக்கு விடிவு காலம் வந்துவிட்டதாய் இராமசாமி நினைத்தான்.'சரி..கதிர்..இன்னும் ஒரே மாதத்தில் அடுத்த புத்தகம் தயாராய் இருக்கும்..புத்தகத்தின் பெயர் கூட தீர்மானித்து விட்டேன்.."வெந்து தணிந்தது காடு.." ' என்றான்.

அடடா..அருமையான தலைப்பு..என்றான் கதிர்.

மாலை வீடு திரும்பிய இராமசாமி..மீண்டும்..வெள்ளைத் தாள்..பேனா வுடன் அமர்ந்து விட்டான்."இவனுக்கு மீண்டும் என்னவாகிவிட்டது ?"என மனைவி வியந்தாள்.

ஆனால், அதே நேரம் கதிர், தன் நண்பன் ஒருவனிடம், காலையில் இராமசாமியை தான் சந்தித்ததையும் பின் தான் கூறியவற்றையும் சொன்னான். 

அதைக் கேட்ட நண்பன்,கதிரிடம் " ஏண்டா இப்படி செஞ்சே..நூலக ஆர்டர் வருவது அவ்வளவு எளிதா?' என்றான்..

'அதெல்லாம் பகீரத பிரயத்னம்..ஆனானப்பட்ட பெரிய பதிப்பகங்களே..ஆர்டர் கிடைக்காது அவதிப் படுகின்றன..இராமசாமியைப் பார்க்க பாவமா இருந்தது..எழுத முடியா ஏக்கம் முகத்தில் தெரிந்தது..அதனால்தான் அப்படி சொன்னேன்' என்றான் கதிர்.

இராமசாமியோ..தனது புத்தகங்கள்..இரண்டாம் பதிப்பு..மூன்றாம் பதிப்பெல்லாம் வருவது போல கையில் வெற்றுத் தாளை வைத்துக்கொண்டு..விழித்தபடியே கனவு கண்டான்.

மேலும் ஆயிரம் புத்தகங்களை வைக்க பரணில் இடம் இருக்குமா..? என்பது அவன் மனைவியின் கவலை.

Comments

Popular posts from this blog

23 - புனிதம்

10 - கரை கடந்த காதல்