23 - புனிதம்



'புனிதம்"

இரவு மணி பன்னிரெண்டு..

கொண்டையா இன்னமும் வரவில்லை.

திடீர் நகரில் தன் குடிசையிலிருந்து வெளியே வந்த குருவம்மா தெருவை பத்தாவதாக எட்டிப் பார்த்தாள் "கொண்டையா வருகிறானா?" என்று.

ஓரிரு நாய்களின் குரைப்பு சப்தத்தைத் தவிர தெரு அனாதையாகக் கிடந்தது.

பக்கத்துக் குடிசையில் கூட தினமும் லேட்டாய் வரும் பெயின்டர் அண்ணன் செல்வமும் வந்தாகி விட்டது.

குருவம்மா..அந்த நேரம் செல்வத்தின் குடிசையைத் தட்டியிருக்கக் கூடாது.ஒருவேளை செல்வத்திற்கு கொண்டையா எங்கே போயிருக்கான்னு தெரிந்திருக்கக் கூடும் என எண்ணியதால்.அவன் வீட்டுக் கதவைத் தட்டினாள்.

செல்வத்துடன் ஒன்றியிருந்த அஞ்சலை பிரிந்து, அரைகுறையாக புடவையைச் சுற்றிக் கொண்டு வெளியே வந்த அஞ்சலை..வாசலில் குருவம்மாவைப் பார்த்ததும் சீறினாள்.

"என்ன புள்ள..எந்த நேரத்துல ஒருத்தர் வூட்டுக் கதவைத் தட்டறதுன்னு தெரிய வேண்டாம்..இப்படி நடு ராத்திரியிலா தட்டறது"

அவள் இருந்த நிலையில்..உள்ளே என்ன நடந்திருக்கக் கூடும் என்பதை உணர்ந்த குருவம்மா, "இல்ல அக்கா..விடியல்ல போன மனுஷன் இன்னும் வரல்ல.அதான்..அண்ணனுக்கு எதாவது தெரியுமான்னு..."என இழுத்தாள்.

"இதோ பாரு புள்ள..என் புருஷன் வேளா வேளைக்கு ஒழுங்கா வேலைக்குப் போயிட்டு வரவர்.உன்னோட வூட்டுக்காரர் போல தெரு பெருக்கறவர் இல்ல.." எனக் காட்டமாகக் கூறிவிட்டு கதவை அடைத்தாள்.

"டாஸ்மாக் கடையில வேணும்னா போய்த் தேடச் சொல்லு" என்ற செல்வத்தின் குரல் குருவம்மாவிற்கு லேசாகக் கேட்டது.

கண்களில் கண்ணீர்ப் பெருக்கெடுக்க..வீட்டினுள் சென்றுக் கதவை அடைத்தாள்.

மணிஒன்றை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில்...

எவரோ நடந்து வரும் ஓசை கேட்டது.மனசு "திக்..திக்" என அடித்துக் கொண்டது.நாய்களின் குரைப்பு சப்தம் நிற்கவில்லை.

மறுவினாடி கதவு தட்டப்படுகிறது..எழுந்து வந்து கதவைத் திறந்தாள்.

பழுப்பு நிற பனியனுடன், மேல் துண்டு ஒன்று தோளில்தவழ..கையில் மஞ்சள் பை ஒன்றுடன் நின்று கோண்டிருந்தான் கொண்டையா.

"ஏன் இன்னிக்கு இவ்வளவு நேரம்?" என்றபடியே அவனுக்கு ஒதுங்கி வழியினை விட்டாள்.

உள்ளே நுழைந்தவன்..மேல் துண்டினை விரித்து தரையில் போட்டுக் கொண்டு படுத்தான்.

கையில் ஒரு சொம்பில் தண்ணீருடன் அவனிடம் வந்தவள்.."ஏன் இவ்வளவு நேரம்னு கேட்டதுக்கு பதிலே சொல்லலையே.."

பதில் இல்லை..

"ஏன் இவ்வளவு கோபம்..வா..மீன் குழம்பு ஆக்கி வைச்சு இருக்கேன்.ஒரு வாய்த் துண்ணு" என்றாள்.

அவன் அதற்கும் ஏதும் பதில் சொல்லாததால்..கீழே அவனருகில் அமர்ந்தபடியே, அவனது நெற்றிக்கட்டில் கை வைத்துப் பார்த்தாள்.

"ஜுரம் கூட இல்லை..பின்ன என்ன..என்ன நடந்தது சொல்லேன்"

"எதுவும் பேசாதமே..மனசு சரியில்ல..அந்தத் தண்ணியைக் கொடு போதும்.எனக்கு சோறு வேண்டாம்" என்றபடியே எழுந்தான்.

மௌனமாக அவனிடம் தண்ணீர் சொம்பை நீட்ட, அவன் அதனை வாங்கி ஒரு வாய் குடித்துவிட்டு கீழே வைத்தான்.

திடீரென குடிசையின் முன் மாட்டின் சாணமும், ஆடுகளின் புழுக்கையும், ஒட்டியிருந்த பாத்ரூமிலிருந்து வீட்டின் முன் வழிந்து ஓடிக்கொண்டிருந்த நீர் வாய்க்காலும் நினைவில் வர..."நான் லேட்டா வந்தது இருக்கட்டும்..நீ இருபத்துநாலு மணி நேரமும் வூட்லதானே இருக்க..வூட்டை சுத்திப் பெருக்கி சுத்தமா வைச்சிருக்க வேண்டாம்..ஒரே கப்பு.."என்றவாறே, திடீரென கோபம் உச்சிக்கு ஏற..அந்தத் தண்ணீ சொம்பை எடுத்து வீச..அது பத்து அடி தள்ளி உருண்டு விழுந்தது.

"தரித்திரம் பீடை..நீ இருக்கற இடத்துல ..எது உருப்புடும்"

"வூட்டைச் சுத்திப் பெருக்கலைன்னுதான் கோபமா? நாலு தரம் பெருக்கிட்டேன்.இந்த மாடுகளும், ஆடுகளும் வந்து போய்க்கினே  இருக்கா..நான் என்ன செய்ய முடியும்?"என்றவள்"சரி..சரி..வென்னீர் போடறேன்.குளிச்சுட்டு..ஒரு வாய் சாப்புட்டுட்டு படு" என்றபடியே..தரையில் கிடந்த சொம்பை எடுத்தாள்.

கொஞ்சம் கூட கோபமா..பதட்டமோ இல்லாமல் வெகு சாவதானமாக சொல்லிவிட்டுத் திரும்பும் அவளை வெறிக்கப் பார்க்கிறான் கொண்டையா.

மத்தியானம் நடந்த அந்த நிகழ்ச்சி அவன் உள்ளத் திரையில் நிழலாடுகிறது.இன்றுமாலை அவன் வழக்கமான அந்தத் தெருவைப் பெருக்குகையில் நடந்த நிகழ்ச்சி..அவன் உள்ளத்தை எப்படி பாதித்து விட்டது.இப்போது,இவளிடம் நாம் கொடூரமாக நடந்தும்...இவ்வளவு சாவதானமாக..ஒன்றுமே நடக்காதது போல இருக்க இவளால் எப்படி இருக்க முடிகிறது?அது எப்படி சாத்தியமாகிறது?"

அவள் மீது சற்று பச்சாதாபம் ஏற்பட..அவளை.."குரு..இங்கே வா.." என அழைத்தான் சாந்தமாக.
 
குருவம்மாவிற்கோ..அவ்வளவு கோபமாக இருந்தவனால்...எப்படி உடனே சாந்தமாக மாற முடிகிறது..என்ற எண்ணம்.

தன்னருகே வந்தவளை இரண்டு முறை ஏற இறங்கப் பார்த்தான்.அவன் உள்ளத்திலே கொந்தளிக்கும் வேதனை குபீரென பொங்கி எழுகிறது.அவன் உதடுகள் துடிக்கின்றது.இமைகள் படபடக்கின்றன.அவனைக் கண்ட குருவம்மா திடுக்கிடுகிறாள்.

"என்ன இது..என்ன நடந்தது?" என பரபரப்புடன் அவள் கேட்கும் போதே, அவன் வாய்விட்டு அழத்தொடங்குகிறான்.

"குரு..குரு.." என அவனால் அழ முடிகிறதேத் தவிர...வார்த்தைகள் ஏதும் வரவில்லை.

அவனது தலையைத் தன்னுடைய மார்பகத்தில் பதித்த வண்ணம் தெப்பமாகக் கிடக்கும் அவன் முகத்தையும், கண்களிலிருந்து பெருகும் கண்ணீரையும் துடைக்கிறாள் அவள்.

"என்னது இது.பச்சைக் குழந்தை மாதிரி..என்ன நடந்தது..அதைச் சொல்லு"என்று அவன் காதோடு காதாகக் கேட்கிறாள்...சற்றே கொஞ்சும் குரலில்.

"குரு..நான் ஒண்ணு கேட்கறேன்..பதில் சொல்றியா?"

தலை அசைக்கிறாள் அவள்.

"சுற்றி வளைச்சுக் கேட்கலை.நேரிடையாகவே கேட்கிறேன்."என்றவன்..சற்றே தயங்கி விட்டு.."குரு..நான் உயிரோட இருக்கறது அவசியமா?" என்கிறான் நிதானமாக...

அவளுக்குத் தூக்கிவாரிப் போடுகிறது உடல் நடுங்குகிறது.வெறி கலந்த குரலில் மீண்டும் கேட்கிறான்,"சொல்லு..நான் உசுர வைச்சுண்டு இருக்கறது நியாயமா?'

அவன் வாயைப் பொத்தியவள்..."ஏன்ன கேள்வி இது?..உங்களுக்கு இன்னிக்கு என்ன வந்து விட்டது?"
'
"ஆமாம் குரு..நான் ஏன் இருக்கணும்? எனக்கு படிப்பு இருக்கா.கௌரவம் இருக்கா..பணம் இருக்கா..இல்ல...பார்க்கவாவது நல்லா இருக்கேனா..நானும் ஏன் ஒரு மனுஷ்னனு உலாவணும்னு நெனச்சேன்'

"ஏன் அப்படி நெனச்சே?"

."நான் மட்டுமில்ல..இந்த உலகமே நேத்து வரைக்கும் அப்படித்தான் நெனச்சுது.என்னை மனுஷன்னு எவனும் மதிக்கல..துப்புரவு பணியாளன்னு சொன்னதும்..வயசு வித்தியாசம் இல்லாம.."டேய் தெருப் பெருக்கி..என்ன வேலை செய்யற..என் வீட்டு வாசல்ல குப்பையைக் கொட்டற..இரண்டு நாளா பெருக்க வரல..ஆஃபிஸர்ஸ் கிட்ட கம்ப்ளைண்ட் பண்றேன்னு  எவ்வளவு கேவலமா என்னை நடத்தியிருக்காங்கத் தெரியுமா?"

சிறிது நேரம் மௌனமாயிருக்கிறான் கொண்டையா..பின், "புள்ள நான் திருடலை..பொய் சொல்லல..கௌரவ வேலைன்னு அவங்க நெனக்கிலன்னாலும் என்னைப் பொறுத்து கௌரவமா சம்பாதிச்சுக்கிட்டு இருந்தேன்.இனாம் கொடுத்தாதான் வேலை ஒயுங்கா செய்வியான்னு ஒரு பெரிய மனுஷன் திட்டியிருக்கார்.நானும் மனுஷந்தான்னு இவங்க சமூகம் ஏன் என்னை ஏத்துக்கலை? எனக்கும் உணர்ச்சியிருக்கு..இதயம் இருக்குன்னு எல்லாம் இவங்களுக்கெல்லாம் ஏன் தெரியலை..இந்த வேலை செய்யறதுக்கு நாக்கை புடுங்கிக்கிட்டு நாண்டுக்கலாமான்னு நெனச்சு இருக்கேன்"

புடவைத் தலைப்பை எடுத்து அவன் முகத்தைத் துடைக்கும் பாவனையில் தன் கண்களில் துளிர்க்கும் கண்ணீரை மறைத்துக் கொள்கிறாள்.

"நீயும் அழுவுறியா?"

பரபரவென முகத்தைத் துடைத்துக் கொண்டு..லேசாக புன்முறுவல் செய்கிறாள்."நானா அழுவுறேன்..நீ எதிர்ல இருந்தா வர்ற அழுகையும் ஓடிடுமே" என்றவ்ள்..பின்.."இதெல்லாம் காலம் காலமா நடக்கறதுதானே..அதுக்குப் போய் இன்னிக்கு ஏன் அழுகை?"

"இல்ல குரு..இன்னிக்கு என்ன நடந்தது தெரியுமா? என்னைத் திட்டின பெரியவர் எனக்கு மாலை போடறார்.என்னைத் தொட்டாலே பாவம்னு நெனச்ச ஒரு பெரிய மனுஷன்..என் கைகள்ல ரோஜாப்பூவைக் கொடுக்கறார்.என்னிய சுத்தி..ஒவ்வொரு வூட்டுக்காரங்களும்..அவங்கவங்க பொஞ்சாதிகளோட நின்னுக்கிட்டு..எனக்கு மலர் அர்ச்சனை செய்யறாங்க."துப்புரவு பணியாளர்..உன்னை மாதிரி ஆளுங்களாலேத்தான் நோய் ரொம்ப பரவாம கட்டுப்பாட்டுக்குள்ள இருக்குன்னு"சொல்லிட்டு  ..மறுக்காம வாங்கிக்கணும்னு..புது சட்டை..வேட்டி வாங்கி..இதோ..இந்த மஞ்சப்பையில போட்டு ஒருத்தர் தராரு..இதெல்லாம் கனவா..இல்ல..நெனவான்னு என்னைக் கிள்ளிப் பாத்துக்கிட்டேன்."

"அப்போதான் நான் எவ்வளவு புனிதமான காரியத்தை செய்யறோமே..இதைப் போய்க் கேவலமா நினச்சோமேன்னு..அழ வர ஆரம்பிச்சுது...தாங்க முடியல குரு.."ண்னு சொல்லியவாறே மீண்டும் குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தான்.

"பொதுஜங்களோட அதிகாரத்துக்கும்..அதட்டலுக்கும் கட்டுப்பட்டுள்ள நீ செய்யறது மகத்தான காரியம்னு அவங்களுக்கு மட்டுமில்ல..உனக்கும் இன்னிக்குத்தான் புரியுது.உன்னை புருஷனா அடைய நான் கொடுத்து வச்சிருக்கேன்.கொஞ்ச நேரம் முன்னால நான் வாழணுமா?ன்னு கேட்டியே..இந்த மனுஷங்க நோய் நொடியில்லாம வாழவாவது உன்னப்போல ஆளுங்க வாழணும்"

மேற்கொண்டு பேச முடியாமல் ..முகத்தை மூடிக் கோண்டு விம்மினாள் குருவம்மா.அவள் உடல் குலுங்கியது..சுவரில் சாய்ந்துக் கொண்டிருந்த கொண்டையா"ஏன் புள்ள அழுவற"ன்னு அவளை அணைத்துக் கொள்கிறான். .

"நீ இவ்வளவு நேரம் அழுததை நெனச்சேன்..அதான்..'என்றாள் அவள்சிரிப்புடன்.

Comments

Popular posts from this blog

14 -நில அபகரிப்பு

20 - அக்கினிக்குஞ்சு