10 - கரை கடந்த காதல்

"பாரதி கண்ட பெண்"

தயங்கித் தயங்கி..."அப்பா....உங்கக் கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்" என்றாள் ரோகிணி.
சிவராமனுக்கு மகளின் தயக்கத்தைப் பார்த்து ஆச்சரியம்..
சிறு வயதிலிருந்தே ரோகிணி, எந்த ஒரு விஷயத்திற்கும் தந்தையிடம் பேச தயங்கியதோ...பயந்ததோ கிடையாது.இன்னும் சொல்லப் போனால் மனதில் நினைப்பதை, அது சரியோ, தவறோ 'பட்' டெனப் பேசக் கூடியவள்.
பள்ளிப் படிப்பை முடித்த போதும் சரி...பொறியியல் கல்லூரியில் சேரும் போதும் சரி, படிப்பு முடிந்து கேம்பஸ் இன்டெர்வியூவில், பிரபல மின் பொருள் நிறுவனத்தில் வேலைக்கு அமர்ந்த போதும் சரி....எல்லாமே அவள் விருப்பம்தான்.
"என்னடா! என்ன விஷயம்...எதுவானாலும் சொல்லு. அப்பா கிட்டே என்ன தயக்கம்?" என்றார் சிவராமன்.
"அது வந்து....ஒன்னுமில்ல அப்பா...நான் தினமும் வேலைக்குக் கிளம்பறச்ச..நம்ம தெரு முனையில் இருந்து ஒருத்தன் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் ஃபாலோ பண்றான்"
சற்றே திடுக்கிட்டார் சிவராமன்.
சம உரிமை..எனப் பெண்கள், ஆண்களுக்கு நிகராக எல்லாப் பிரிவுகளிலும் பெருமளவு பெருகி வந்தாலும் சமுதாயத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு ஜீரோதான்.

பெண்ணைப் பெற்றவர்கள், தன் பெண் வீட்டை விட்டு வெளியே கிளம்பினால், திரும்பி வரும்வரை மடியில் நெருப்பையல்லவா கட்டிக் கொண்டு இருக்க வேண்டியுள்ளது.
 ஒரு பெண் வீட்டை விட்டுக் கிளம்பி, காலையில் சென்றால்...மாலையில் பத்திரமாக வீடு வந்து சேருவாளா..? என்பதே இன்றைக்கு நிச்சயமில்லைங்கிற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது
"ஏம்மா...அந்தப் பையன் பார்க்க எப்படியிருக்கான். ரௌடி மாதிரி இருக்கானா"
"அவன் என்னைப் பின் தொடர்ந்து வர்றது எனக்குத் தெரியறது.ஆனா..அவன் எப்படி இருக்கான்னு நான் பார்க்கல"
"எவ்வளவு நாளா இப்படி நடக்கிறது"
"ஒரு மாசமா அப்பா"
"போலீஸ்ல வேணும்னா கம்ப்ளைன்ட் பண்ணலாமா?"
"வேண்டாம்ப்பா. கொடுமைக்கு ஆளாகும் பெண்களோட வேதனையைப் போலீஸ் புரிஞ்சுக்கறதில்ல.அதனாலதான் இது போல விஷயங்களைப் பொண்ணுங்க போலீஸ்ல புகார் கொடுக்கறதில்ல.புகார் கொடுக்கப் பயப்படறாங்க.புகார் கொடுக்கறவங்க கிட்டே போலீஸ்காரங்க எப்படியெல்லாம் கேள்விகளைக் கேட்கறாங்கன்னு சொல்லத் தேவையில்லை. பெண்கள் பிரச்னைன்னு வர்றப்போ பொறுப்பற்ற முறையிலே தான் அவங்க நடக்கறாங்க.உடனேயே ஜாதி முலாம் பூசறது...கள்ளக் காதல்னு சொல்றது.இப்படி போலீஸ்..ஊடகங்கள்னு எல்லாமே உடனே அந்தப் பொண்ணுக்குக் களங்கத்தை ஏற்படுத்திடறாங்க.அதனால ..நாம போலீஸுக்குப் போக வேண்டாம்னு தோணுதப்பா"
"இல்ல அம்மா.சமீபத்தில கூட இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்து...முடிவு என்னாச்சுன்னு ஞாபகம் இருக்காம்மா"
"இப்படிப் பேசுவீங்கன்னுதான் உங்க கிட்ட இவ்வளவு நாளா இது பத்திப் பேசல"
"சரி..என்னதான் செய்யலாம்னு சொல்ற"
"உங்களுக்குத் தெரியணும்கிறதுக்காகத்தான் இதைச் சொன்னேன்.மத்தபடி அவனை எப்படி "டீல்" பண்ணனும்னு எனக்குத் தெரியும்"
ரோகிணி நம்பிக்கையோடும், தைரியத்தோடு வளர்க்கப்பட்டப் பெண்,அவள் வாழ்க்கையில் எது நடந்தாலும், அதை எதிர் கொள்ளும் மன உறுதி உள்ள பாரதி கண்ட புதுமைப் பெண் அவள்.
சிவராமனின் மனதில் இப்படிப்பட்ட எண்ணம் இருந்தாலும், "அம்மா..ரோகிணி....வீரமா ஏதாவது செய்யறதா நினைச்சு எந்த ஆபத்திலேயும் மாட்டிக்காதேம்மா" என்றார்
"எந்த ஒரு விஷயத்திலேயும்...வீரம் மட்டுமே இருந்தாப் போறாதுப்பா.விவேகமும் வேணும்.அது எங்கிட்டே இருக்கறதா நான் நம்பறேன்'
"சரிம்மா.எது செய்யறதா இருந்தாலும், அப்பாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுச் செய்'
"இன்னும் என்ன செய்யலாம்னு நான் யோசிக்கலை.ஆனா, நான் தனியாகவே இதுக்கு ஒரு முடிவு கட்டறேன்"
"சாப்பிட வராம...அப்பாவும், பொண்ணும் அப்படி என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க?" சமையலறையிலிருந்து வந்த அம்மாவின் குரல் அவர்கள் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அடுத்த நாள் காலை வீட்டிலிருந்து அலுவலகம் செல்லக் கிளம்பிய ரோகிணி, பேருந்து நிலையத்திற்கு வந்துக் கொண்டிருந்தாள்.
தெருமுனையில் அவளுக்காகக் காத்திருந்த அந்த இளைஞன், அவளை பத்தடி இடைவெளியில் தொடர்ந்தான்.
அவள் சற்றே நின்றாள்.அவனும் நின்றான்.தன் மொபைலை எடுத்து யாருக்கோ அலைபேசினாள்.
அந்த வாலிபன் என்ன நினைத்தானோ..அவளைக் கடந்து வெகு வேகமாகச் சென்று விட்டான்.
அவள், அலைபேசியில் பேசியதைக் கண்டு பயந்திருக்கக் கூடும்.
இதைக் கண்ட ரோகிணிக்கு, அவன் அவ்வளவு பயங்கரமானவனாக இருக்க வாய்ப்பில்லை எனத் தோன்றியது..ஆனால், யார் கண்டது? கோழையையும் வீரனாக ஆக்குவது தானே பெண்ணாசை.
ஒரு பெண் வயதுக்கு வந்ததிலிருந்து, இறக்கும் வரை..அவள் உடலில் எத்தனை மாற்றங்கள்?! இயற்கை ஏன் பெண்களுக்கு ஏராளமான வலிகளையும், அவஸ்தைகளையும் தந்திருக்கிறது? அது போதாதென்று இது போன்ற பிரச்னைகள் வேறு.இதையெல்லாம் புரிந்து கொள்ளாத ஆண்களில் பலர் பெண்களை எப்போதும் ஏன் காமக்கண்களுடனேயே பார்க்கிறார்கள்?
மிருகங்களுக்கும் புணரும் காலம் என்று ஒன்று உண்டு.இந்த உலகு தொடர்ந்து இயங்க, எல்லா உயிரினங்களுக்கும் உற்பத்தித் தேவை.அதை மேட்டிங்க் சீசன் என்பார்கள்.அந்த நாட்களில் தான் அவை தன் பெண் இணையுடன் இணையும்.
ஆனால், இந்த மனிதர்களுக்கு மட்டும் தான் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும் , 24 மணி நேரமும் இதே எண்ணம் தான்
இப்படியெல்லாம் எண்ணியவாறே பேருந்து நிலையத்திற்கு வந்தாள் ரோகிணி.
பேருந்தில் கூட நிம்மதியாய்ப் போக முடிகிறதா? அதுவும் முடியாது.நெரிசலைப் பயன் படுத்திக் கொண்டு, பேருந்தின் வேகத்தையும் பயன் படுத்திக் கொண்டு ,கண்ட ,கண்ட இடங்களிலெல்லாம் தொடுபவர்கள் எவ்வளவு பேர்கள்.அதை வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொள்ளும் பெண்கள் எவ்வளவு பேர்?
காலையில் வேலைக்குக் கிளம்பி, மாலை வீடு திரும்பும் வரை எவ்வளவு சோதனைகள்...எவ்வளவு வேதனைகள்...
பேருந்து நிலையம் வந்தவளின் கண்கள் அவனைத் தேடியது
அவள் போக வேண்டிய பேருந்து வந்த போது, கூட்டத்தோடு முட்டி மோதி அவளும் ஏறினாள்.அவனும் ஏறினான்.திடீரென காதருகே வந்து "ஐ லவ் யூ" என்றான் அவன் பிறர் அறியாது.
காதில், அந்த உஷ்ணக் காற்று தகித்துக் கொண்டே இருந்தது அவளுக்கு.
அலுவலகத்தை அடைந்ததும், ரெஸ்ட் ரூமிற்கு சென்று...குளிர்ந்த நீரில் முகத்தை...குறிப்பாக காதுகளை கழுவிக் கொண்டு, சற்றே புத்துணர்வுடன் வந்தவள்...ஒரு முடிவிற்கு வந்தவளாய்த் தன் சிநேகிதி நந்தினி இருக்கும் இடம் நோக்கிச் சென்றாள்
================================
வழக்கம் போலவே அடுத்த நாள் வேலைக்குக் கிளம்பினாள் அவள்.தெரு முனையில் அவன் காத்திருந்தான்.அவளைத் தொடர்ந்தான்.அவன் அருகாமையை உணர்ந்தவள், தன் அலைபேசியை எடுத்து, அவன் காதுகளில் விழுமாறு பேசத் தொடங்கினாள்.
"ஹலோ நந்தினி...உன்னைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு? ஆர் யூ ஃப்ரீ ஆன் சாடர்டே"

'ம்..அப்படியா..தென் சாடர்டே ஈவனிங்க் மீட் பண்ணுவோம்..மெரினாவுல...ஐஸ் ஹவுஸ் எதிரே..அங்கதான் அவ்வளவு கூட்டம் இருக்காது.டோன்ட் ஃபர்கெட்..சாடர்டே ஈவனிங்க் சிக்ஸ் தர்ட்டி...ஓகே' என்றாள்.
அனைத்தும் அந்த இளைஞனின் காதில் விழும் வண்ணம்.பின் பேருந்து நிலையம் நோக்கிச் சென்றாள்.
அவள் தனதி சிநேகிதியுடன் பேசவில்லை.அவள் பேசியது அனைத்தும் தன்னை மெரினா வரச் சொல்வதற்கான சமிக்ஞை என எண்ணினான் அவன்
=====================================
சனிக்கிழமை மாலை மணி ஆறரை.ஐஸ் ஹவுஸ் மெரினா
நல்ல காற்று.தினமும் அப்படி இருக்கும் எனச் சொல்ல முடியாது.மழை வரும் போல இருந்தது.
காற்று வாங்கிய கூட்டம்...கொஞ்சம் கொஞசமாக கலையத் தொடங்கியது.மழைவரும் முன் வீடு செல்ல வேண்டும் என மக்கள் செல்ல ஆரம்பித்து விட்டனர் போலும்!
மெதுவாக இருள ஆரம்பித்தது.வெறிச்சோடிய மணல்.இப்போது...இங்கொன்றும், அங்கொன்றுமாய் மக்கள்.சுண்டல் விற்கும் சிறுவர்களையும் காணோம்.
ரோகிணி தனியாக...தண்ணீரில் நின்றுக் கொண்டு கால்களை நனைத்துக் கொண்டிருந்தாள்
கரையை நோக்கி வந்த அலை...திரும்பும் போது.கால்களுக்கு அடியில் இருக்கும் மணலையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போயிற்று.அவளையேப் பார்த்தபடி அந்த இளைஞனும் தன் கால்களை நனைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு வயதானவர் சற்று தள்ளி...ரோகிணியையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.
எவ்வளவு வயதானால் என்ன...இந்த ஆண்கள் அனைவரிடமும் ஒரு சபலம் இருக்கத்தான் செய்கிறது.
சில்லென்று அடித்தக் காற்றில் அவளது முடி பறந்தது.அனிச்சையாக கைகள் அவ்வப்போது அவற்றை சரி செய்தன.
அந்த இளைஞன் , சற்று அருகே வந்து நின்று விட்டான்.
"யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்" என் கிறாள் ரோகிணி
"நீதான் வேண்டும்" என்றான் அவன்
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லை..கூச்சலிட்டாலும் யாரும் வரப் போவதில்லை.
அந்தக் குளிரிலும் அவளது மயிர்க்கால்களில் வெப்பஅலையால் வேர்வை.இது என்ன விதியின் விளையாட்டா? தானே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு விட்டோமோ...இன்று நமக்கு ஆபத்து என்பதுதான் விதியோ. என்றெல்லாம் எண்ணியபடியே கருவிழிகளை இங்கும் அங்கும் அலைய விட்டுக் கொண்டிருந்தாள்.
திடீரென ஒரு பெரிய அலை வந்து திரும்பும் போது கால்களை இழுக்கத் தன் நினைவிற்கு வந்தாள்.அந்த இளைஞன் முன்னர் நின்ற இடத்தில் தான் நின்றுக் கொண்டிருந்தான்.
"அடச்சே! தேவையில்லாமல் தான் தன் எண்ண அலைகளைச் சிறகடித்து பறக்க விட்டு விட்டோம் என்பதை அறிந்தாள்.
அந்த சமயத்தில் திடீரென எங்கிருந்தோ நான்கு பேர் அங்கு வந்து சேர்ந்தனர்.ரோகிணியை ஒட்டி நின்று கொண்டு..உற்சாகமாக சப்தமிட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்கள் போதையில் இருக்கக் கூடும் என எண்ணினான் அந்த இளைஞன்.
அந்த நால்வரில் ஒருவன் ரோகிணியிடம் வந்து அவள் கைகளைப் பற்றி இழுத்தான்.அவள் திமிறியவாறு...தன் கைகளை விடுவித்துக் கொண்டாள்.அவன் அவளை விடுவதாக இல்லை.
"என்னை காப்பாத்துங்க...காப்பாத்துங்க" என்று கத்தியபடியே அந்த இளைஞனிடம் ஓடி வந்தாள் ரோகிணி.
"அண்ணா...காப்பாத்துங்க..அவங்க ஏதோ அசிங்க அசிங்கமாபேசிக்கிட்டு கையைப் பிடிச்சு இழுக்கறாங்க...அண்ணா..பிளீஸ் காப்பாத்துங்க" என்றாள்
"அண்ணா" என்று அவள் அழைத்த போது அந்த இளைஞனின் உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை ஒரு சிலிர்ப்பு.ஒரு பரவசம்...இதுவரை யாரும் அவனை 'அண்ணா' என அழைத்ததில்லை.அவன் தன்னை மறந்தான்.தன்னை ஒரு ரத்த உறவாக்கிய ரோகிணியைக் காப்பாற்ற, அவர்களை எதிர்க்கத் துணிந்தான்.
அந்த எதிர்ப்பைக் கண்ட நால்வரும் அவனிடமிருந்து தப்பி ஓடினர்.வயதானவர் இருந்த இடம் தெரியவில்லை.
"கவலைப்படாதே" நான் இருக்கிறேன்.உன் வீடுவரை பத்திரமாக துணைக்கு வருகிறேன்" என்றான்.
இப்போதெல்லாம் வீட்டிற்கு ஒரு பிள்ளை.அவர்களுக்கு அக்காள், தங்கை பாசம் தெரியவில்லை.அதனால் அம்மாவைத் தவிர வேறு எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவர்களிடம் காம உணர்வு தோன்றுகிறது.அப்படிப்பட்ட இளைஞர்கள் மனதில் தங்கை என்ற பாச உணர்வைத் தூண்டி விட்டால் சகோதரப் பாசத்தை உணரத் தொடங்கி விடுவார்கள் என என்றோ "குட் டச் பேட் டச்" பற்றி ஒரு மருத்துவர் பேசிய சொற்பொழிவு ரோகிணிக்கு ஞாபகத்தில் வர,அதை தன்சிநேகிதி நந்தினியிடம் கூறி...தன் அலுவலகத்தில் தன்னுடனேயே வேலை செய்யும் நான்கு நண்பர்கள் மூலம் ஒரு நாடகத்தை நடத்தி, அந்த இளைஞனின் காம இச்சையை..பாச உணர்வாக மாற்றினாள் ரோகிணி.
பாசம் என்ற அலையை அந்த இளைஞனின் உள்ளத்தில் அடிக்க வைத்து..அவன் உள்ளத்தில் இருந்த காமம் என்ற மணலை அடித்துச் செல்ல வைத்தாள்
ஒரு கிரிமினல் உருவாவது தவிர்க்கப்பட்டது. எந்தக் குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...என்பது உண்மை.
"உங்களை எங்க ஏரியாவில பார்த்திருக்கேன்.நீங்க எங்க அண்ணா வேலை செய்யறீங்க.?." என்று அவனுடன் பேசியபடியே நடக்க ஆரம்பித்தாள்


அவர்களிடையே பாசமலர் பூக்கத் தொடங்கியது.

(கல்கி- 21-7-19)

Comments

Popular posts from this blog

23 - புனிதம்

20 - அக்கினிக்குஞ்சு